Leo Trailer - லியோ ட்ரெய்லர்.. ரசிகர்கள் ரகளை.. நரிக்குறவர்களை அவமதித்த திரையரங்குக்கு நேர்ந்த சேதம்..
சென்னை: Leo Trailer (லியோ ட்ரெய்லர்) லியோ படத்தின் ட்ரெய்லரை பார்த்த ரசிகர்களால் ரோகிணி திரையரங்கம் ரசிகர்கள் சேதம்மாக்கியுள்ளனர்.
தென்னிந்தியாவின் மோஸ்ட் வாண்டட் இயக்குநர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். அவர் இதுவரை இயக்கிய மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்துள்ளன. குறிப்பாக விக்ரம் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஹிட் என்பதும் அதுதான் கோலிவுட்டுக்கு புத்துணர்ச்சி கொடுத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இச்சூழலில் லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கி முடித்திருக்கிறார்.
லியோ ரிலீஸ்: படம் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகிறது. லியோவுக்கு யு/ஏ சர்ட்டிஃபிகேட் கிடைத்திருப்பதால் கண்டிப்பாக இந்தப் படத்தில் வன்முறை அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் பல இடங்களில் கெட்டவார்த்தைகள் வருவதால் அதற்கு சென்சார் போர்டு மியூட் போட்டுவிட்டதாகவும் ஒரு புகைப்படம் வெளியானதும் குறிப்பிடத்தக்கது.
ட்ரெய்லர்: இதற்கிடையே லியோ படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி படத்தின் ட்ரெய்லர் ரிலீஸானது. ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் ஏகத்துக்கும் கொண்டாடிவருகின்றனர். குறிப்பாக லியோ ஆயிரம் கோடி ரூபாய் வசூலை அள்ளிவிடும் என உறுதிபட கூறிவருகின்றனர். இந்த சூழலில் விஜய், அஜித் உள்ளிட்ட பெரிய ஹீரோக்களின் பட ட்ரெய்லர் ரிலீஸ் என்றாலே சென்னை ரோகிணி தியேட்டர் களைகட்டும்.
என்ன முடியுமோ பண்ணிட்டாங்க: அதன்படி லியோ ட்ரெய்லர் மாலை 6.30 மணிக்கு ரிலீஸானதும் ரோகிணி தியேட்டரிலும் திரையிடப்பட்டது. ட்ரெய்லர் வெளியானதும் தியேட்டருக்குள் இருந்த ரசிகர்கள் தங்களது உணர்ச்சி மிகுதியால் தியேட்டர் சீட்டுகள் அனைத்தையும் சீட்டுக்கட்டுக்களாய் சுருட்டி போட்டனர். ஒருகட்டத்தில் தியேட்டர் நிர்வாகத்தினரால் ரசிகர்களை கட்டுப்படுத்தவே முடியவில்லை. கிட்டத்தட்ட நூறு சீட்டுக்கள்வரை அவர்கள் உடைத்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. ரசிகர்களின் இந்த செயல் பலரையும் முகம் சுளிக்க வைத்திருக்கிறது.
முக்கியமாக சிம்பு நடித்திருந்த பத்து தல படத்தின்போது டிக்கெட் எடுத்திருந்த நரிக்குறவ மக்களை ரோகிணி திரையரங்கம் உடையையும், நிறத்தையும் வைத்து உள்ளே விடவில்லை. இப்போது ரசிகர்கள் செய்திருக்கும் செயல் அந்த திரையரங்கையே யோசிக்க வைத்திருக்கும். முக்கியமாக இனி ஒரு திரைப்படத்துக்கு ஒருவர் வந்தால் அவரது உடையோ நிறமோ முக்கியம் இல்லை செயல்தான் முக்கியம் என்பதை உணர்ந்து ரோகிணி திரையரங்கம் செயல்படும் என சமூக வலைதளங்களில் பலர் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.